மதுரை
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
பொதுவாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை நேற்று வந்தது. இதையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கினர்.
இதையொட்டி மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர ராஜ பெருமாள், மற்றும் உற்சவர் தேவியர்கள், கள்ளழகர் பெருமாள் போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை, நடந்தது. மேலும் உபசன்னதிகளான சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கல்யாணசுந்தரவல்லி தாயார் ஆகிய சுவாமிகளுக்கும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரசித்தி பெற்ற அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை எனும் புனித தீர்த்தத்தில் பக்தர்கள் வரிசையாக ெசன்று நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.
வரும் வழியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் அங்குள்ள மூலவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணி சுவாமி, வித்தக விநாயகர், மற்றும் வேல்சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தல்லாகுளம்
கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் அதிகாலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி முதல் சனிக்கிழமைையயொட்டி பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதே போல மதுரை கூடலழகர் பெருமாள் கோவில், மேலமாசி வீதி மதனகோபாலசாமி கோவில், தெற்குமாசி வீதி பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், வடக்குமாசி வீதி நவநீத கிருஷ்ண கோவில், முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகபெருமாள் கோவில், நரசிங்கம் யோக நரசிம்மர் கோவில், உத்தங்குடி நாகர் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் அனந்தசயன பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. சீதாராமன் பட்டர் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.கோவில் செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகாவிஷ்ணுவிற்கு பால், தயிர் உள்ளிட்ட 12 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.