திருச்சி
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருச்சி:
வைகாசி விசாகம்
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் அவதரித்த, பல விசேஷங்களை உள்ளடக்கிய வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருச்சியை அடுத்த குமாரவயலூரில் உள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் வந்து சுவாமி வழிபட்டனர். இன்று(திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) ஆளும் பல்லக்கில் உற்சவர் வீதி உலா நடைபெற்று, திருவிழா நிறைவு பெறுகிறது.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல் திருச்சி-தஞ்சாவூர் சாலை அருகே வரகனேரியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
மேலும் கோட்டை தையல்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, காஜாநகரில் உள்ள ஓம் ஸ்ரீசக்தி வேல்முருகன் கோவில், ஆண்டார் தெருவில் உள்ள முருகன் கோவில், சுந்தர்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், உறையூர் பாளையம் பஜார் சாலை மற்றும் மேலப்புதூரில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மேலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பிரசித்தி பெற்ற பஞ்சவர்ணசுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், நாகநாதசுவாமி கோவில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவில், பாலக்கரை செல்வவிநாயகர் கோவில், உப்பிலியபுரம் பசுபதீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ள முருகன் சன்னதியில் மூலவருக்கு வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தா.பேட்டை, முசிறி
தா.பேட்டையில் விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானை ஆறுமுகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். இதேபோல் தா.பேட்டை அருகே என்.கருப்பம்பட்டி கிராமத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமான் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தா.பேட்டையை அடுத்த தேவனூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு 16 வகையான வாசமான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முசிறி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை யொட்டி முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவில் சந்தனக்காப்பு, மலர் அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநெடுங்களநாதர் கோவில்
திருவெறும்பூர் அருகே உள்ள காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற தலமான திருநெடுங்களநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருநெடுங்களநாதர், மங்களாம்பிகை, சோமாஸ்கந்தர் சுவாமிகளுக்கு 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருச்சி இந்திரா நகரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.