கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கள்ளக்குறிச்சி
தில்லை கோவிந்தராஜ பெருமாள்
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு தில்லை கோவிந்தராஜ பெருமாள் விஸ்வரூப தரிசனமும், அதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்செய்தனர். இதேபோல் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் வேத கோஷங்கள் முழங்க சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத பெருமாள், மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், திரவுபதி அம்மன், வாசவி அம்மன், தேவபாண்டலம் ஆதிபுரீஸ்வரர், குந்தவேல் முருகன், மகாநாட்டு மாரியம்மன், பெரியநாயகி அம்மன், ஏரிக்கரை துர்க்கை அம்மன், குளத்தூர் லட்சுமி நாராயணபெருமாள், ஆஞ்சநேயர், ஆறுமுக பெருமான், பூட்டை மாரியம்மன், மஞ்சபுத்தூர் கைலாசநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. பின்னர் மதியம் வடை மாலை சாற்றப்பட்டு, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அசம்பாவிதங்களை தடுக்க வட பொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.