< Back
மாநில செய்திகள்
கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
மாநில செய்திகள்

கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
2 Oct 2023 9:05 PM GMT

கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

காந்தி கோவில்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட செந்தாம்பாளையத்தில் வையாபுரி முதலியார் என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு கோவில் கட்டினார். இங்கு காந்தி, கஸ்தூரிபாய், விநாயகர், முருகர், லட்சுமி, சரஸ்வதி, சக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று கோவிலில் மகாத்மாகாந்தி மற்றும் கஸ்தூரிபாய்க்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அபிஷேகம்

அதன்படி 154-வது காந்தி ஜெயந்தி விழா நேற்று செந்தாம்பாளையம் காந்தி கோவிலில் கொண்டாடப்பட்டது. முன்னதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெருந்தலையூரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து காந்தி கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் காந்தி, கஸ்தூரிபா சிலைகளுக்கு பால், இளநீர் மஞ்சள், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பவானி ஆற்று தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

தீபாராதனை

அதைத்தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். அதன்பிறகு காந்திக்கு கதர் வேட்டி துண்டு, கஸ்தூரிபாவுக்கு கதர் சேலையும் அணிவிக்கப்பட்டு பொங்கல் படைத்து, தீபாராதனை காட்டப்பட்டது.

கையில் தேசியக்கொடியுடன் காந்தி காட்சி தந்தார். அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாத்மா காந்தி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்