< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகைகையையொட்டி முருகன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வைகாசி மாத கிருத்திகை

பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையொட்டி கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கதிர்மலை முருகன்

இதேபோல் மோகனூர் அடுத்த பாலப்பட்டி கதர்மலை முருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்