தர்மபுரி
தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ரத சப்தமியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரத சப்தமி திருவிழா
தர்மபுரி அருகே அதகப்பாடி லட்சுமி நாராயண சாமி கோவிலில் ரத சப்தமி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் லட்சுமி நாராயணருக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சூரிய பிரபை வாகனத்தில் லட்சுமி பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு கோவில் கோபுரத்தின் முன்புறம் சூரிய உதயத்தின் போது பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி உற்சவம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சீனிவாச பெருமாள் ரத சப்தமி நாளில் கோவிலில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் அருண் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குமாரசாமிப்பேட்டை
இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ரத சப்தமியையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் ரத சப்தமி ஊர்வலம் நடந்தது.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் ரத சப்தமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.