நாமக்கல்
கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|நாமக்கல் மாவட்டத்தில் தை அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படும்.
அந்த வகையில் நேற்று தைமாத அமாவாசையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி, பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சாமி கோவில் உள்ளிட்ட அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோகனூர்
இதேபோல் மோகனூர் பகுதிகளில் தை அமாவாசையையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், நவலடியான் கோவில், வள்ளியம்மன் கோவில், சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில், ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் மூங்கில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள், வீரமாத்தி அம்மன், பெரியாண்டவர், மதுரைவீரன் சாமி கோவிலில் பூஜை நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.