தர்மபுரி
அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|வளர்பிறை பஞ்சமியையொட்டி அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
வளர்பிறை பஞ்சமி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே இந்த கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பான வரவேற்பு
இந்த வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகி மல்லிகா அன்பழகன், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு காரிமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.