தர்மபுரி
தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
நல்லம்பள்ளி
தேய்பிறை அஷ்டமி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளிக்கவச ராஜ அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
சத்ரு சம்ஹார யாகம்
இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
கோட்டை கோவில்
இதேபோன்று தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.