< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.

3-வது சனிக்கிழமை

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 7 மணிக்கு மேல் திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பரமத்தியில் உள்ள கோதண்டராம சாமி ஆகிய கோவில்களிலும் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மலர் அலங்காரம்

இதேபோல் மோகனூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. தோளூர் சர்வமலை அலமேலுமங்கா சமேத ஸ்ரீரங்கநாதர் சாமி, மணப்பள்ளி வரதராஜ பெருமாள், மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் வளையப்பட்டி கஸ்தூரி மலை ரங்கநாதர் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் காலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சந்தனகாப்பு

கந்தம்பாளையம் அருகே நல்லூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி சாமிக்கு விசேஷ வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமி சந்தன காப்பு அலங்காரமும், ஆராதனை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்