< Back
மாநில செய்திகள்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை வார்டுகள்
கரூர்
மாநில செய்திகள்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை வார்டுகள்

தினத்தந்தி
|
23 Sep 2023 6:07 PM GMT

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைத்தள தொட்டிகளை இரு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணியினை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு சிகிச்சை வார்டுகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொசுப்புழு உருவாகாத வண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் எவரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்துவதை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையான மருத்துவ முகாம்களை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் முகாம்களில் சித்த மருத்துவத்துறை மூலம் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென கொசு வலைகளுடன் கூடிய படுக்கை வசதியுள்ள சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்க வேண்டும்.

கொசுப்புழு உருவாகாத...

பொதுமக்கள் அனைவரும் வீட்டை சுற்றி தேவையற்ற பொருட்களை அகற்றி கொசுப்புழு உருவாகாத நிலையினை உறுதிப்படுத்த வேண்டும். தண்ணீர் தேங்கா வண்ணம் பராமரிக்க வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து தங்கள் பகுதியில் காய்ச்சல் பரவா வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சித்தா மருத்துவர்களுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராமாமணி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா மற்றும் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்