பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்..!
|தமிழகத்தில் வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன. தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது.
இதனால் கூடுதலாக சிறப்பு ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 14,16-ம் தேதியும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வரும் 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரெயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரெயில்) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கிளம்பும் ரெயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கமாக தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வருகிறது.
இதுதவிர, தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை மற்றும் 13, 16-ம் தேதிகளிலும், திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் இடையே வரும் 12, 14, 17-ம் தேதிகளிலும் முன்பதிவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வருகிறது.