< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் குளுகுளு சீசனையொட்டி சிறப்பு ரெயில் - பயணிகள் உற்சாகம்
மாநில செய்திகள்

ஊட்டியில் குளுகுளு சீசனையொட்டி சிறப்பு ரெயில் - பயணிகள் உற்சாகம்

தினத்தந்தி
|
29 March 2024 2:19 PM IST

பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த நிலையில் ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணம் செய்யவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 1ம் தேதி வரை அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதேபோல் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை 9 .10 மணிக்கு கோடைகால சிறப்பு மலைரெயில் 180 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் காலை முதலே ஆர்வத்துடன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர். கோடைகால சிறப்பு மலை ரெயிலுக்கு சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்