குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
|குற்றாலத்தில் தனியார் விடுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி,
சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (வயது 54). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்தார். இந்நிலையில் குற்றாலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நேற்று வந்திருந்தார்.
அவருடன் பாதுகாப்பு பணிக்காக பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே விடுதியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இறந்து கிடந்த அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த விடுதி ஊழியர்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்திபன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.