நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோவில் யானைக்கு தயாரான பிரத்யேக காலணி...!
|நெல்லை அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதிக்கு பிரத்யேக காலணியை பக்தர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய திருக்கோவில்களில் ஓன்றாக அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் யானையின் பெயர் காந்திமதி. கடந்த 1958-ம் ஆண்டில் தனது 13 வயதில் கோவிலுக்கு வந்துள்ளது. தற்போது இதன் வயது -52
கடந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு சென்ற யானையை பரிசோதித்த மருத்துவர்கள் வயதிற்கு ஏற்ற எடையை விட 300 கிலோ அதிகமாக இருப்பதாகவும் இதனால் உடல்நிலை பாதிக்கப்படும் என கூறினர்.
இதனையடுத்து யானையின் உடல் எடையை குறைப்பதற்காக தினமும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலம் 150 கிலோ எடையை குறைத்துள்ளது.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக யானை நடக்கும் வேகம் குறைந்து உள்ளது. இதனால் வியாபாரிகளும் பக்தர்களும் இணைந்து 12 ஆயிரம் மதிப்புள்ள பிரத்தியேக காலணியை யானைக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். மருத்துவர்கள் ஆலோசனையின் படி யானைக்கு செருப்பு அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாளை துவங்க உள்ள ஆனி திருவிழாவில் காந்திமதி யானை காலணி அணிந்து வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.