திருவண்ணாமலை
மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடக்கம்
|திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.
நெய் காணிக்கை
இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர்.
பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.