திருச்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு பதிவு முகாம்
|கட்டுமானம்- அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம் மணப்பாறை தாலுகாவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உள்ளிட்ட இதர 17 நலவாரியங்கள் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது. மேலும், திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கண்ணாடிக்கான உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்து மரண நிவாரணத்தொகை, பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி சிறப்பு முகாம் மணப்பாறை தாலுகாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவித்தொகைகளை பெற்று பயன் அடைய வேண்டும். சிறப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம், 10, அழகர்சாமி தெரு, அன்புமெஸ் அருகில் மணப்பாறை திருச்சி என்ற முகவரியில் நடக்கிறது. பதிவு மேற்கொள்வதற்கு 1.ஆதார் அட்டை, 2.ரேஷன்கார்டு, 3.புகைப்படம், 4.வங்கி புத்தகம் (நடப்பு வரை) உள்ளிட்ட ஆவணங்கள் அசல் மற்றும் நகலுடன் சிறப்புமுகாம் நடைபெறும் இடத்துக்கு நேரில் வர வேண்டும் என்று திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஏ.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.