< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் காப்பீடு செய்ய சிறப்பு பதிவு முகாம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விவசாயிகள் காப்பீடு செய்ய சிறப்பு பதிவு முகாம்

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்ய சிறப்பு பதிவு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

விழுப்புரம்

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த சம்பா பருவ நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சம்பா நெல் பயிருக்கு பிரீமியம் தொகையாக ரூ.464 செலுத்த வேண்டும். விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு கட்டணம் செலுத்தலாம். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலுடன் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் இறுதிக்கட்டமாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களிலும் விவசாயிகளுக்கு காப்பீடு கட்டணம் செலுத்த ஏதுவாக வட்ட மற்றும் வட்டார தலைமையிடத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து எதிர்வரும் பருவமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறது. சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்பதால் கடைசி நேர கூட்டத்தை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், முன்கூட்டியே பதிவு செய்து பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்