< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
திருவாரூர்
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

தியாகத்திருநாள்

இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. பக்ரீத் பெருநாள் என்றாலே இல்லாதவருக்கு இயன்றதை அளிக்கும் தியாகத்திருநாள் என்று இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

நேற்று திருவாரூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் பீர்முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோல் திருவாரூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

திருவாரூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் துணைத்தலைவர் முகமது பாசித் தலைமையிலும், கொடிக்கால்பாளையம் மலாயாகார்டன் வளாகத்தில் திருவாரூர் நகர தலைவர் மீரான் தலைமையிலும், மரக்கடை மற்றும் அத்திக்கடை பகுதியில் மாலிக், யாசர் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

சிறப்பு தொழுகை

அதேபோல் அடியக்கமங்கலம், புலிவலம், கூத்தாநல்லூர், தண்ணீர்குன்னம், குடவாசல், பொதக்குடி, வாழ்க்கை, கொல்லாபுரம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலக உயிர்கள் அனைத்தும் நோய் ஏதுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி தொழுகை செய்தனர். மேலும் வீடுகளில் தயார் செய்த குர்பானியை கொடுத்தனர்.

த.மு.மு.க. சார்பில் அடியக்கமங்கலம் பகுதியில் உள்ள மார்க்கெட் தெரு ஏ.ஒய்.ஏ. திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர். இதனையொட்டி நீடாமங்கலம் கீழத்தெரு பள்ளிவாசல், பழையநீடாமங்கலம் பள்ளிவாசல், மேலராஜவீதி பள்ளிவாசல் மற்றும் கோவில்வெண்ணி, ஆலங்குடி, பூவனூர் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்