< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
கரூர்
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
10 July 2022 11:58 PM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையொட்டி ஆடு உள்ளிட்டவற்றை பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கினை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கினை ஏழை, எளியோருக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கினை தங்களது தேவைக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.

சிறப்பு தொழுகை

கொரோனா தொற்று காரணமாக கடந்த காலங்களில் பக்ரீத் பண்டிகை சற்று உற்சாகமிழந்து காணப்பட்டது. ஆனால் இந்தாண்டு பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.இதனையொட்டி கரூர் - கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

கட்டி தழுவி வாழ்த்து

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்றவர்கள், ஒருவரையொருவர் கட்டி தழுவியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.இதனைத்தொடர்ந்து குர்பானியாக ஏழை, எளியோருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.கரூர் திருமாநிலையூரில் அமைந்துள்ள சாய்கார்டன் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மதர்ஷா பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி சேரு பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நடந்தது.

அரவக்குறிச்சி

பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் நேற்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண் டனர். இதேபோல் அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

கிருஷ்ணராயபுரம்

லாலாபேட்டை ஜூம்மா பள்ளியில் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே கரூர் ரோட்டில் உள்ள ஜன்னத்துல பிர்தொஸ் பள்ளி, தோட்டக்குறிச்சி மதர்ஸா பள்ளி, டி.என்.பி.எல், புஞ்சை புகழூர், நூருஸ் இஸ்லாமிய மஸ்ஜீத் ஆகிய பள்ளிவாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் கரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

மேலும் செய்திகள்