< Back
மாநில செய்திகள்
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கரூர்
மாநில செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
10 April 2023 12:06 AM IST

கரூரில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

புனித வெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கி மேற்கொண்டனர். அந்த சமயத்தில் தவம், தானம், இறைவனிடம் தனது பாவங்களை எடுத்து கூறி மன்னிப்பு கேட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

கடந்த 7-ந்தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்ததை எண்ணி சிலுவைப்பாதை நிகழ்வுகள் கரூரில் உள்ள தேவாலயங்களில் நடந்தன.

சிறப்பு பிரார்த்தனை

இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் கரூர் சர்ச் கார்னரில் உள்ள புனித தெரசம்மாள் தேவாலய மைதானத்தில் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வை நினைவுகூரும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது இயேசுநாதர் உலக மக்களை ரட்சிக்க மீண்டும் பிறப்பு எடுத்ததை போற்றும் வகையில் பாடல்களை பாடி கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேற்று காலையும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், கரூர் சி.எஸ்.ஐ. தேவாலயம், பசுபதிபாளையம் கார்மல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்