கரூர்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
|கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு திருப்பலி
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் ஸ்டார்களை தொங்க விட்டும், வீட்டை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தும் பண்டிகையை வரவேற்றனர். மேலும் கரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அத்துடன் பல தேவாலயங்களின் முன்புறத்தில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள புனித தெரசாம்மாள் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. அப்போது நள்ளிரவு 12 மணிக்கு சொரூபத்தை பாதிரியார் லாரன்ஸ் கையில் ஏந்தி தூக்கி காண்பித்தார்.
வாழ்த்துக்களை பரிமாறினர்
பின்னர் தேவாலயத்தில் உள் பகுதியில் வைக்கோல் போரால் செய்யப்பட்டு இருந்த குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. அப்போது இயேசு பிறப்பின் பாடல்களை கிறிஸ்தவர்களால் உற்சாகமாக பாடப்பட்டன. திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கரூர்- கோவைரோடு, செங்குந்தபுரம் காந்திகிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதேபோல் கரூர் சர்ச்கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.ஹென்றி லிட்டில் நினைவாலயம், பசுபதிபாளையம் கார்மேல் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கரூரில் உள்ள அனைத்து தேவாலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் முல்லை நகரில் உள்ள சுவிேசஷ திருச்சபை உலகரட்சகர் ஆலயத்தில் நேற்று அதிகாலை 5 மணிக்கு திருச்சபை போதகர் பிரவீன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் போதகர் சிறப்பு பிரார்த்தனை செய்து கிறிஸ்தவர்களுக்கு அப்பம் வழங்கி ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல புகழூர் ஹைஸ்கூல்மேடு சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.