< Back
மாநில செய்திகள்
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கடலூர்
மாநில செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
9 April 2023 1:24 AM IST

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2-ந் தேதி) குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நேற்று முன்தினம் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்தனர். சிலுவையில் அறையப்பட்ட தினத்தில் இருந்து 3-வது நாளான உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் சாமிப்பிள்ளை நகர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்குதந்தைகள் வின்சென்ட், ரொனால்ட் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது. அப்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் கார்மேல் அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை, தூய எபிபெனி ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்