தஞ்சாவூர்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
|தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
திரு இருதய பேராலயம்
2022-ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுஇரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது. மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து புத்தாண்டு மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு 2022-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு புதிய ஆண்டில் கடவுளுடைய வழி நடத்துதலுக்காக சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை சேகரத் தலைவர் பிரைட் பிராங்கிளின் நடத்தி, சிறப்பு செய்தி அளித்தார்.
ஆராதனை முடிந்தவுடன் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இதில் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேகர குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
தூய பேதுரு ஆலயம்
தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
களை கட்டியது
2023-ம் ஆண்டை வரவேற்கும் முகமாக நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நண்பர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி தஞ்சை மாநகரப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.