< Back
மாநில செய்திகள்
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
மாநில செய்திகள்

புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
29 March 2024 8:43 AM IST

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சென்னை,

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

தாழ்மையின் உருவேயான இயேசு தம்முடைய சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, 'நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள்' என்றார். அன்றைய நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவைப்பாதை இயேசுவின் திருவுருவத்தை சிலுவையில் இருந்து எடுத்து பேராலய கீழ் கோவிலுக்கு பவனியாக எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் செய்திகள்