< Back
மாநில செய்திகள்
முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
திருச்சி
மாநில செய்திகள்

முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
22 April 2023 9:36 PM GMT

முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்றுதான் நோன்பு. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஒரு மாத காலமாக நோன்பை கடைபிடித்தனர். புனித மாதமான ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த முஸ்லிம்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று முஸ்லிம்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். திருச்சியில் மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துஷா மாதிரி பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பிலும், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உணவு சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருச்சி மாநகரில் 99 பள்ளிவாசல்களிலும், ஈத்கா மைதானம் உள்பட 24 திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் கூட்டு தொழுகை நடைபெற்றது. இதையொட்டி மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மணப்பாறை

இதேபோல் மணப்பாறையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பாத்திமா மலையில் உள்ள ஈத்கா திடலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் புத்தாடை அணிந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுதனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களின் அன்பையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இதில் சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது.

இதேபோல் வையம்பட்டி, புத்தானத்தம், இளங்காகுறிச்சி, துவரங்குறிச்சி, வளநாடு, மகாளிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

மேலும் செய்திகள்