நாமக்கல்
பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
|நாமக்கல்லில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
பக்ரீத் பண்டிகை
நாடு முழுவதும் நேற்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல்லில் நேற்று காலையில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்கள் கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தட்டாரத்தெரு, சேலம் ரோடு வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர்.
அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை பேட்டை பள்ளிவாசல் இமாம் சாதிக் பாஷா நடத்தினார். இதில் பள்ளிவாசல் முத்தவல்லி தவுலத்கான் மற்றும் நிர்வாகிகள், திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
நல உதவிகள்
இதேபோல் கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல், மாருதி நகர் பள்ளிவாசல் என நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்கி மகிழ்ந்தனர்.
திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை
இதேபோல் திருச்செங்கோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு டவுன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் மற்றும் பாத்திமா பள்ளிவாசல், கூட்டப்பள்ளி பள்ளி வாசல் ஆகிய இடங்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர் தியாக திருநாளாம் குர்பானி கடமையை நிறைவேற்றினர்.
நாமகிரிப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த மஜீத் பள்ளிவாசலில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை செய்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது. சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் ஈதுஹா மைதானத்தில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான்சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல் பரமத்தி மற்றும் பாலப்பட்டி பகுதிகளிலும் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.