கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் சிறப்பு தொழுகை
|பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வரும் காலங்களில் உலக மக்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழவும், கொரோனா நோய் தொற்று போன்ற நோய் நொடிகள் இன்றி மக்கள் வாழவும் தொழுகை நடைபெற்றது.
இதில் சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் ஆரதழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
சங்கராபுரம்
அதேபோல் சங்கராபுரம் காட்டுவன்னஞ்சூர் மஜீதுன் நவபி பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஜாமியா டவுன் பள்ளிவாசல், மேட்டுத்தெரு மதினா பள்ளிவாசல், தியாகராஜபுரம் சாலை காஜியார் மக்கா பள்ளிவாசல் வழியாக பூட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்த ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினர். இதே போல் தேவபாண்டலம், பூட்டை, ராமராஜபுரம், வடசேமபாளையம், மூரார்பாளையம், பாலப்பட்டு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.