< Back
மாநில செய்திகள்
மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
மாநில செய்திகள்

மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
5 March 2023 3:21 AM IST

மீன்பிடி ெதாழிலில் சிறந்து விளங்க கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இருநாட்டு மக்களும் கலந்துகொண்டனர். கச்சத்தீவு ஆலய விழா நிறைவு ெபற்றதை தொடர்ந்து அங்கு சென்றிருந்த ராமேசுவரம் மக்கள் படகுகளில் ஊர் திரும்பினர்.

புனித அந்தோணியார் ஆலயம்

இந்தியா-இலங்கை இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2 நாட்கள் நடக்கும் விழாவில் இலங்கை மற்றும் ராமேசுவரம் மக்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி தொடங்கியது.

கொழும்பு மறை மாவட்ட துணை பிஷப் ஆண்டன் ரஞ்சித் பிள்ளை நாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜெபரத்தினம் உள்ளிட்டவரை இருநாட்டு பங்குத்தந்தையர்களும் வரவேற்று அழைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து கொழும்பு மறை மாவட்ட துணை பிஷப் ஆண்டன் ரஞ்சித் பிள்ளை நாயகன் தலைமையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. இந்தியா-இலங்கை மக்கள் நோய்கள் நீங்கி நலமுடன் வாழவும், இருநாட்டிலும் மீன்பிடி தொழில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை நடந்தது.

3 ஆயிரம் பேர் பங்கேற்பு

இந்த பிரார்த்தனையில் தமிழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை தேவசகாயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி ராகேஷ், வடபிராந்திய கடற்படை தளபதி அருனத்தென்ன கோன், யாழ்ப்பாணம் மாவட்ட கலெக்டர் சிவபாலசுந்தரம் மற்றும் 2 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பலி காலை 9 மணி வரை நடைபெற்று பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழாவானது நிறைவடைந்தது.

வழக்கமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மக்களை விட இலங்கை மக்கள் அதிகமாக கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து இந்த ஆண்டு குறைவான மக்கள்தான் வந்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தான் கலந்துகொண்டதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் ராமேசுவரத்தில் 2,193 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஊர் திரும்பினர்

பின்னர் ராமேசுவரத்தில் இருந்து சென்றவர்கள், படகுகளில் கச்சத்தீவில் இருந்து ஊர் திரும்பினர்.

மேலும் செய்திகள்