திருவண்ணாமலை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
|ஆடிமாத பிறப்பை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கண்ணமங்கலம்
ஆடிமாத பிறப்பை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ரேணுகாம்பாள் கோவில்
கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிமாதம் பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூைஜகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகைதந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வழிபாடு செய்வது சிறப்பு என்பதால் ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள அரியாத்தம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
இதேபோன்று காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில், ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவில்,
சூரியகுளம் அருகே உள்ள அன்னியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் உள்ள மாரியம்மன், அங்காளம்மன், பூங்காவனத்தம்மன், திரவுபதி அம்மன், வரசக்திவிநாயகர், வாசவி அம்மன், முத்தாலம்மன், பக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வாசனை திரவியங்கள் மற்றும் பால், தயிர், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனை நடந்தது.
அம்மனுக்கு மலர் மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.