நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில், சதுர்த்தியையொட்டிவிநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
|நாமக்கல் மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருச்செங்கோடு
தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி திருச்செங்கோடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் கணபதி யாகத்துடன் மூலவருக்கு பூஜை நடந்தது. இதையடுத்து சாமி புஷ்ப பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செங்கோடு மலைக்கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில், முக்கூட்டு விநாயகர், ராஜகணபதி, கருடவிநாயகர், திருநீறு விநாயகர், அவ்வை கணபதி, செல்வ விநாயகர், ஆதிவிநாயகர், கைலாச நாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா நடந்தன.
மேலும் நகரில் பாவடி தெரு, சி.எச்.பி காலனி, கூட்டப்பள்ளி காலனி, தொண்டிகரடு, சூரியம்பாளையம், சட்டையம் புதூர், கவுண்டம்பாளையம், நெசவாளர் காலனி, நரிப்பள்ளம் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களால் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.
பள்ளிபாளையம், எருமப்பட்டி
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள ராஜகணபதி கோவில், சித்தி விநாயகர் கோவில், அரசமரத்து விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனி, ஆவாரங்காடு, அக்ரஹாரம், ஆவத்திபாளையம், வெடியரசம் பாளையம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
எருமப்பட்டி சிங்களம்கோம்பை ஏரிக்கரை அருகே உள்ள முருகன் கோவிலில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்