< Back
மாநில செய்திகள்
குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
திருச்சி
மாநில செய்திகள்

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
22 April 2023 9:06 PM GMT

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

குருப்பெயர்ச்சி

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் நேற்று இரவு 11.27 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று குருபகவானை வழிபட்டனர். திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் பரிகார ராசிகாரர்களுக்காக லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று இரவு 10 மணிக்கு விநாயகர் பூஜையுடன் யாகபூஜை நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு மஹாபூர்ணாஹூதி யாகபூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு மகா அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பயபக்தியுடன் குருபகவானை வேண்டி வணங்கினர். பின்னர் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயசுவாமி கோவில், தெப்பக்குளம் நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

உத்தமர்கோவில்

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. முன்னதாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, விநாயகர் பூஜை, புண்யாகவஜனம், பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பரிகார ராசிக்காரர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கும் சிறப்பு மகாயாகம், விக்னேஸ்வர பூஜையுடன் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

தா.பேட்டை

தா.பேட்டையில் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. அப்போது குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது. இதில் பரிகார ராசிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை நடைபெற்றது. குரு தட்சிணாமூர்த்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்