ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை...!!!
|தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஊர்கூடி மகிழும் ஆடிப்பெருக்கு நன்னாள்!
உத்திராயண காலமான தை மாதம் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலமான ஆடி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருப்பதை தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தனர். வேளாண் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகள் பாயும் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக கொண்டாடப்படும் தமிழர் பண்பாடு ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.
விதை, விதைத்து நாற்று நட்டுப் பயிர் வளர்க்கும் நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப்பெருக்கு. நிலத்தில் நாற்று நடப்படுவதற்கு முன்னர் நீரோட்டம் என்ற ஆற்றுப்பெருக்கு கணக்கிடப்படுகிறது. தென்மேற்குப் பருவக் காற்றினால் மழை பொழிந்து, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள்.
ஒகேனக்கல் முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பயிர் செய்ய உற்ற துணையான நீரை வணங்கி, விதைக்க ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு விழா சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நீரை பயன்படுத்திப் பயிர் வளர்க்கும் வழிகளோடும், மழையையும் அதைப் பயன்படுத்துவதை நினைவுகூரும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைகிறது.
அந்த நல்ல நாளில் நீர் நிலைகள், ஆறுகள் அருகே பொதுமக்கள் ஒன்றாக கூடி, தண்ணீரை வணங்கி, வயலில் விதைக்கும் பணிகளை ஆரம்பிப்பர். அதை கொண்டாடும் வகையில் கிராமப்புற சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள்.
ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள். பெண்கள் ஆற்றங்கரையில், சாணத்தால் மெழுகி கோலமிட்டு, படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தருவதற்காக இயற்கையை போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர். பின்னர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.
ஆடிப்பெருக்கு நாளில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. சூரியன் இயக்கம், காற்றின் போக்கு, நிலத்தின் பக்குவம் ஆகியவற்றிற்கேற்ப நீரைப் பயன்படுத்தி பயிர் வளர்க்கும் நமது வேளாண் பண்பாட்டில், விதைப்பு செய்யும் காலமாக ஆடி மாதம் அமைகிறது.
நாற்று விட்டு, நடவுக்கு முன் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. நட்ட பயிர் வளர்வதற்கேற்ற நீர்வளம் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கிறது. விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது. பயிர் மழையைத் தாங்கி நிற்கும் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி, பின் தை மாதம் அறுவடை என பெய்யும் மழையை ஒட்டியே பயிர் வளர்க்கப்பட்டது.
நீர் மேலாண்மை செய்ய சூரியன் இயக்கத்தை ஒட்டி ஆறு, குளங்கள் சீரமைக்கப்பட்டு, நீரின் அருமை அறிவுறுத்தப்படும் நாள் ஆடிப்பெருக்கு ஆகும். கடவுளையும், இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நாள், தற்சார்பு விவசாய வழிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் பகுதி கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள்
கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி பக்தர்கள் வரிசையாக நின்று அம்மனை தரிசித்துச் சென்றனர். மேலும் கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி தண்டு மாரியம்மன் கோவில், மொடச்சூர் பால மாரியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், அருள் மலை முருகன் கோவில், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
தென் பென்னை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பொன்னேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. காவேரிப்பட்டணம், தளி அள்ளி, நெடுங்கல், பேரு அள்ளி, மடம், மாரிசெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்களும் , பக்தர்களும் தென் பென்னை ஆற்றில் புனித நீராடி, தெ முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் உள்ள அகரம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சோழர்களால் வழிபாடு செய்யப்பட்ட பழமை வாய்ந்த சக்திவாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆடிபெருக்கை முன்னிட்டு அகரம் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள சுப்பிரம்ணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். சுவாமிக்கு புனித நீரால் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல். மஞ்சள். குங்குமம் வழங்கப்பட்டது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பர்கூர் அருகே ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் 40-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா
பர்கூர் அடுத்த ஜிஞ்ஜம்பட்டி கிராமத்தில் மலைமடுவு ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலய 40 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப காவடி தூக்கியும் முதுகில் அலகு குத்தியும் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி அருகே உள்ள மகாராஜ கடை அங்கன மலை காட்டு வீர ஆஞ்சநேயா கோவிலில் ஆடிப்பெருக்கு விழா அதி விமர்சையாக நடைபெற்றது .ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை சிறப்பு அபிஷேக் ஆராதனைகளும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.
பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா
பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவன்று (ஆடி18) பேரூர் நொய்யல் படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு,
இலைப்படையல் வைத்து, 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து, காதோலை, கருகுமணி, தாழைமடல், நாணல்இலை, தின்பண்டங்கள் ஆகியன வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்தது காரணமாக, கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடத்த கோவில் நிர்வாகம் தடை ஏதும் விதிக்கவில்லை. இதே போல் இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று காலை முதலே பேருந்துகளில் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
மேலும், நொய்யல் ஆற்றில் லேசான தண்ணீர் வரத்து மட்டுமே இருந்தது. ஆற்றின் இருமருங்கிலும் பக்தர்கள் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து, 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, சப்த கன்னிமார் தெய்வங்களை சுற்றி வந்த சுமங்கலி பெண்கள், மாங்கல்ய சரடுகளை, தங்களது கழுத்தில் அணிவித்துக் கொண்டனர். பின்னர், அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு, நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு, அன்னதானங்களை பக்தர்கள் வழங்கினர்.
ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும், அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் ஆடி18 சிறப்பு வழிபாட்டு பூஜை
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் ஆடி 18 தினத்தையொட்டி அங்காளம்மன் தங்க கவசம் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது.
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் திரளான பக்தர்கள் சென்று காவிரி ஆற்றில் புனித நீராடி அங்காளம்மனை வழிபாடு செய்து செல்கின்றனர்.
இதனையடுத்து இன்று ஆடி பெருக்கு விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான மக்கள் காவிரி ஆற்றங்கரையில் புனித நீராடிய பின்னர் அங்காளம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
இதனையடுத்து அங்காளம்மன் தங்க கவச அலங்காரம் செய்து அபிஷேகம் தீபாராதனை வழிபாட்டு பூஜை நடைபெற்றது.
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிபெருக்கு விழா
சாணார்பட்டி அருகேயுள்ள திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிபெருக்கு தினத்தை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர், தயிர் உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் பகுதியில் உள்ள காவிரியாற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு பண்டிகையன்று மோட்ச தீபம் விடுவதும், மீனவர்களுக்கான பரிசல் போட்டியும் நடைபெறுவது வழக்கம். இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். மேலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் சிறு வியாபாரிகள் கடைகள் அமைக்கப்பட்டிருப்பது திருவிழா கோலமாக காட்சியளிக்கும். ஆனால் கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மற்றும் கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் கடைகள் அமைக்கவும், படகு போட்டி நடத்தவும் அனுமதி அளித்துள்ளதால் சிறு வியாபாரிகள் மற்றும் பரிசல் போட்டியை நடத்தும் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி பிறந்துவிட்டாலே விவசாயிகளும், பொதுமக்களும், பக்தர்களும் மிகுந்த உற்சாகமாகி விடுவது வழக்கம். காவிரியில் தண்ணீரின் அளவு அதிகரித்து விவசாயம் செழிப்பதோடு,கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி பதினெட்டு அன்று தங்களது கோயில்களில் உள்ள குல தெய்வத்தின் ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் சுத்தம் செய்தும், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செய்தும், சிறப்பு பூஜைகளை செய்தனர்.
பெண்கள் ஆடி பதினெட்டு பண்டிகையன்று பதினெட்டு நாட்கள் வீட்டில் முளைக்க வைக்கப்பட்ட நவதானியங்களான முளைப்பாரியை கொண்டு வந்தனர். பின்னர் குடும்பத்தினர்,புதுமணத் தம்பதிகள் ஆகியோர் தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரியில் குளித்து பூஜைகள் செய்து தங்களது முன்னோர்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும்,காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் வாழை இலையில் காதோலை,கருகமணி, தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு,காப்பரிசி, புத்தாடை ,மஞ்சள் தடவிய நூல் மற்றும் முளைப்பாரிகள் ஆகியவற்றை படைத்து வணங்கி பின்னர் அந்த முளைப்பாரிகளை ஆற்றில் விட்டனர்.
பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது குல தெய்வ கோயில்களில் உள்ள ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்தனர். பின்னர் அருள் வாக்கு வந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று அதிகாலை முதலே நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காவிரி ஆற்றில் குளித்து ஆடி பதினெட்டு பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இடையக்கோட்டை பகுதியில் ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டியில் பெரிய அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று சுவாமி மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிசேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல இடையக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் நடந்த விழாவில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை நவாமரத்துப்பட்டியில் உள்ள விநாயகருக்கு நேற்று செலுத்தி அபிசேகம் நடத்திய பின்னர் அங்கிருந்து வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக வந்து நடப்புசாமி மற்றும் தொட்டிச்சியம்மனுக்கு தீர்த்த அபிசேகம் நடத்திய பின்னர் கோவில் பூசாரி சுப்பையன் மூலவருக்கு சிறப்பு அபிசேகம் நடத்திய பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏரளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு அரிச்சந்திரா என்ற நாடகம் நடந்தது.
காரைக்கால் ஆறுகளில் ஆடிப்பெருக்கு பெண்கள் புதுத்தாலி அணிந்து பரவசம்
காரைக்காலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆற்றுப்படுகைகளில் பெண்கள் மங்கலப் பொருட்களுடன் காவிரித் தாய்க்குப் படையலிட்டு, புதிதாக தாலிக் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.
நெடுங்காட்டில் நாட்டாறு, மேலக்காசாக்குடியில் வாஞ்சியாறு, காரைக்காலில் அரசலாறு, நூலாறு, முல்லையாறு படித்துறைகளில் காவிரித்தாய்க்கு பெண்கள் படையலிட்டு வழிபட்டனர். மேலும், திருப்பட்டினத்தில் திருமலைராயனாறு படித்துறையில் ஏராளமான பெண்கள் படையலிட்டனர்..
நேற்று அதிகாலையிலிருந்தே ஆற்றங்கரைகளில் குவிந்த பெண்கள் படித்துறைகளை மஞ்சள் நீர் கொண்டு சுத்தம் செய்து, கோலமிட்டனர். படித்துறையில் விநாயகர், முருகன், காவிரி அன்னை மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கினர். படையலில் காப்புக்கயிறு, காப்பு அரிசி, காய். கனிகள், சந்தனம், மஞ்சள், குங்குமம், மலர்கள், மங்கள அர்ச்சனைப் பொருட்கள் வைத்து வழிபட்டனர்.
மேலும் புதுமணத் தம்பதியர்கள் ஏராளமானோர் ஆற்றங்கரைகளில் குழுமியிருந்தனர். திருமணத்தின்போது அணிந்த மண மாலைகள், அலங்காரப் பொருட்களை ஆற்று நீரில் விட்டனர். பெண்கள் காவிரித்தாய்க்கு படையலிட்ட கனிகள், மலர்கள், தேங்காய், நாணயங்கள் போன்றவற்றையும் நீரில் கொட்டினார். அவற்றை எடுப்பதற்கு பலரும் போட்டியிட்டனர்.
படையல் முடிந்ததும் ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள் அனைவருக்கும் மஞ்சளில் நனைத்த காப்புக்கயிறுகள் கட்டப்பட்டன. புதுமணப் பெண்களும், சுமங்கலிகளுக்கு படையலிட்ட புத்தம்புது மாங்கல்யக் கயிறுகளை அவரவர் உறவுகள் மூலம் அணிந்தனர்.
காவிரி ஆற்றில் திரளான மக்கள் புனித நீராடி வழிபாடு
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்த தலமாக கருதப்படுவதால் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு தலையில் அருகம்புல் மற்றும் செல்லாத காசுகளை வைத்து தண்ணீரில் முழ்கி விட்டு விட்டு புனித நீராடி காவிரி ஆற்றங்கரையில் கற்சிலைகள் வைத்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று ஆடி பெருக்கு விழாவையொட்டி சேலம், கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை,மகுடஞ்சாவடி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, ஜலகண்டாபுரம் தேவூர், மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான மக்கள் அதிகாலை முதலே பல்வேறு வாகனங்களில் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று நீராடி கோவில் திருவிழாக்களுக்கு தீர்த்த குடம் எடுத்து சென்றனர்.
குலதெய்வ கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஈட்டி வேல் கத்தி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று காவிரி ஆற்றில் கழுவி காவிரி கரையில் வைத்து பூஜை செய்தனர். புதுமண தம்பதிகள் புனித நீராடி தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர், மேலும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்,புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் திருமண மாலை மற்றும் பூக்களை தூவி விட்டனர்.
மேலும் திரளான மக்கள் தலையில் அருகம்புல் மற்றும் செல்லாத காசு வைத்து தண்ணீரில் முழ்கி விட்டு விட்டு காவிரி ஆற்றங்கரையில் உள்ள குலாங்கற்கல் சிலைகள் எடுத்து வைத்து அதற்கு பூக்கள் குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்தனர்.
மேலும் கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு அங்காளம்மன் சிறப்பு அலங்காரம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் மாலை வரை வழிபாடு செய்தனர், கூட்ட நெரிசலை சமாளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட வரிசையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு வரிசையாக சென்று வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர்.
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் ஆடி பெருக்கு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் கொட்டாயூரில் இருந்து கல்வடங்கம் வரை சுமார் 2கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் தேவூர் சப் இன்ஸ்பெக்டர் அப்பு தலைமையில் போலீசார் வாகனங்களை அருகில் உள்ள விவசாய காலி நிலத்தில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், லாரி, டெம்போ,பேருந்துகள்,நிறுத்த வசதிகள் செய்தனர்.
காவேரிபட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர், கோனேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி நிர்வாகத்தினர் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஶ்ரீ பச்சைமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சைமலை முருகன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதலே முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு ராஜா அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள காவடி திருவிழாவுக்கு இன்று கொடியேற்றத்துடன் பூஜை தொடங்கியது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீ பச்சைமலை முருகனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது.