கடலூர்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை
|புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் 4 ஆயிரம் பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெல்லிக்குப்பம்
புரட்டாசி முதல் சனி
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இது 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து, மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
4 ஆயிரம் பேர் நேர்த்திக்கடன்
தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காலை 5 மணி முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் தேவநாதசாமியை தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திருவந்திபுரம் பகுதியில் குவிந்தனர்.
பின்னர் சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சிறப்பு பஸ்கள்
இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் கூட்டநெரிசலை பயன்படுத்தி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.