விக்டோரியா எட்வர்டு ஹால் முறைகேடு குறித்து சிறப்பு அதிகாரி விசாரிக்கக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு
|விக்டோரியா எட்வர்டு ஹால் முறைகேடு புகார் குறித்து சிறப்பு அதிகாரி விசாரணை நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மதுரை டவுன் ஹால் என அழைக்கப்படும் விக்டோரியா எட்வர்டு ஹால் சங்கத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாக முன்னாள் உறுப்பினர்கள் புகார் அளித்தனர். இதன்படி, சங்கத்தை நிர்வகிக்கவும், முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்கவும், மதுரை வடக்கு மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத்தை நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதிகாரம் இல்லை
தனி நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து விக்டோரியா எட்வர்டு ஹால் கவுரவ செயலாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, சட்டப்படி, விசாரணை நடத்த சிறப்பு அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. பதிவாளருக்குத்தான் அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணை கூடாது
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தனி நீதிபதி முன்புள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, விக்டோரியா எட்வர்டு ஹால் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். மேலும், விதிகளின்படி, சிறப்பு அதிகாரி விசாரணை நடத்த முடியாது. எனவே, தனி நீதிபதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த விவகாரத்தில் சிறப்பு அதிகாரி எந்த ஒரு விசாரணையையும் நடத்தக்கூடாது. தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டத்தின்படி, அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம்" என்று கூறியுள்ளனர்.