< Back
மாநில செய்திகள்
கடலூரில் பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்
மாநில செய்திகள்

கடலூரில் பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
20 Sep 2022 5:59 AM GMT

கடலூர் மாவட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியை தேடி செல்கிறார்கள்.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மட்டும் கடந்த ஒரு வாரமாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகளவில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இருக்கும் பகுதிகளில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூரில் பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 60 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. கிராமங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ குழுவினர் மருந்து வழங்குகின்றனர். காய்ச்சல் இருப்பவர்கள் சிறப்பு மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற மருத்துவ குழுவினர் அழைத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்