திருநெல்வேலி
சிறப்பு மருத்துவ முகாம்; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
|திசையன்விளையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
திசையன்விளை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பள்ளி நிர்வாக குழு தலைவர் சேம்பர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர் வரவேற்று பேசினார்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். பொது மருத்துவம், குடல் நோய், கண் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் காது, மூக்கு தொண்டை உள்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த வகைகள், ஈ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன், கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது முதல்-அமைச்சரின் இலவச காப்பிட்டு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டது. முகாமில் 2290 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அதிகாரிகள், கவுன்சிலர்களுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.