கன்னியாகுமரி
மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
|காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதால் குமரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நாகர்கோவில்:
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதால் குமரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிறப்பு மருத்துவ முகாம்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோல் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதில் ஒரு பகுதியாக அனைத்து அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 1,000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதே போல குமரி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
காய்ச்சல் பாதிப்பு
அந்த வகையில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் பிள்ளையார்விளை அரசு நடுநிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மருத்துவ குழு காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டது. பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புடன் மாணவர்கள் வந்துள்ளார்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களிடம் அவர்களது குடும்பத்தினர் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவர்களுக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பானது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், மற்றவர்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.