காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழாவினையொட்டி கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் கைத்தறி அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து காமாட்சி அம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்து பயன்பெற்றனர்.
இந்த விழாவில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட அரசு அலுவலர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.