தூத்துக்குடி
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
|தூத்துக்குடியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம்
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்மநாயகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி கோட்டத்தில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் கோட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
உதவி தொகை உயர்வு
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் இயலாமைக்கு ஏற்றவாறு உபகரணங்கள் வழங்கப்படும். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரத்து 200 ஆகவும், ரூ.ஆயிரத்து 500 பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
90 சதவீதம் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் வகையில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.ஆயிரம் கூடுதலாக சேர்த்து ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை நமது மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை பெறாதவர்களும், ஆதார் அட்டை பெறாதவர்களும், இந்த முகாமில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன்
மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கான முன்பணத்தை தமிழ்நாடு அரசே செலுத்துகிறது. அரசின் திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜூடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தாசில்தார் ஜான்சன் மற்றும் கவுன்சிலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.