தேனி
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
|பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் செயல்படுதல் போன்றவையும் நடக்கின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் 4, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.