< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
26 May 2022 5:00 PM GMT

திண்டுக்கல்லில், குழந்தைளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது.

வளர் இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 'நலமான குழந்தைகள் வளமான தமிழகம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 3 வாரங்கள் இந்த முகாம் நடக்கிறது.

அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் ஜே.ஜே.நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கமலா நேரு மருத்துவமனை டாக்டர் சிபி வர்மா தலைமையிலான மருத்துவ குழுவினர், குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை கணக்கிட்டனர். பின்னர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தனர்.

அதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெற்றோருக்கு பரிந்துரை செய்தனர். இந்த சிறப்பு மருத்துவ முகாம் குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் குழந்தைகளின் எடை, உயரம், ஊட்டசத்து, உடல் நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். பின்னர் அது தொடர்பான விவரங்களை வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் அச்சடித்து பெற்றோரிடம் வழங்குவோம். அந்த அட்டை மூலம் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ளலாம். மேலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் அரசின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்