15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் -தமிழக அரசு அறிவிப்பு
|சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி, கூடுதல் டி.ஜி.பி. வெங்கடராமன் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை), சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க், காவல்துறை துணைத் தலைவர் ராஜேந்திரன் (குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு), சென்னை போலீஸ் துணை கமிஷனர் ஷாஜிதா (இணையவழி குற்றப் பிரிவு), காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை) ஆகியோர் பதக்கம் பெறுகின்றனர்.
புலன் விசாரணை பணி
அதுபோல, புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையில் 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அதன்படி, திருப்பூர் கொங்கு நகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில் குமார், மதுரை சரக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா,
அரியலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, திருப்பூர் மாவட்டம் இணைய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திராதேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, திருச்சி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை மறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் விருது பெறுகின்றனர்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடை தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள், முதல்-அமைச்சரால் மற்றொரு விழாவில் வழங்கப்படும்.
இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.