< Back
மாநில செய்திகள்
சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
5 March 2023 6:52 PM GMT

சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் அசூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கிஸ் தலைமை தாங்கி பேசியதாவது:- பெண்கள் தங்கள் கணவனை முதலில் மதித்து நடத்தல் வேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமையோடு இருந்தால் அந்த வீட்டில் பெண் குழந்தைகள் நலமுடன் இருக்கும். பெண் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்க பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கவேண்டும். பெண் குழந்தைகள் படித்தால் தான் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கும். பெண் கல்வி கட்டாயம் அவசியம். ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமானால் முதலில் கணவன்- மனைவி ஒற்றுமை இருத்தல் வேண்டும். அப்போது தான் அந்த வீடு நன்றாக இருக்கும். அதன்பின் அந்த கிராமம் நன்றாக இருக்கும். பிறகு அந்த நாடே நன்றாக இருக்கும் எனவே கணவன்-மனைவி ஒற்றுமையோடு பெண் குழந்தைகளை நல்ல முறையில் பாதுகாத்து கட்டாய கல்வி கற்க வழி வகை செய்திட வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி சுப்புலட்சுமி பேசியதாவது:-

ஒரு பெண் 18 வயது முடியும் வரை குழந்தை தான். குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானது, யாராக இருந்தாலும் என் பேத்தி என்றோ, என் அக்காள் பெண் என்றோ, என் அண்ணன் பெண் என்றோ திருமணம் செய்து வைக்கக்கூடாது. அதற்கு பெயர் தான் குழந்தைகள் தடுப்பு திருமணச்சட்டம் என்றும் பெண் குழந்தைகள் அரசின் சொத்து என்றும், 18 வயது முடிந்தாலும் அந்த பெண்ணை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து வைக்க முடியாது என்றார். மேலும் குழந்தைகள் தடுப்பு திருமணச்சட்டம் மற்றும் கட்டாய திருமண சட்டம், பெண் குழந்தைகள் உரிமையியல் சட்டம் குறித்தும் பேசினார். இதில் மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல் செந்தில்நாதன், வக்கீல்கள் திருமால், ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதிமான அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார்.

மேலும் செய்திகள்