< Back
மாநில செய்திகள்
கனியாமூர் கலவரம் தொடர்பாக  சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்

தினத்தந்தி
|
20 July 2022 5:55 PM GMT

கனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த கலவரத்தை, சமூக வலைதளங்கள் மூலம் பலர் ஒன்றிணைக்கப்பட்டு, அரங்கேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளார்கள். அதே நேரத்தில் கலவர வழக்கை விசாரிக்க காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார்.

விசாரணை தொடக்கம்

அதன்படி சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், கிங்ஸ்லின், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், முத்துமாணிக்கம், சந்திரமெவுலி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இதையடுத்து, கண்காணிப்பு சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட உயரதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது கலவரம் நிகழ்ந்தது தொடர்பாக போலீசாருடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து கலவரம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

பின்னணியில் இருப்பவர்கள் யார்?

இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் கலவரத்தை தூண்டியவர்கள், கலவரத்திற்கு காரணமாக அமைந்த வாட்ஸ்-அப் குழுக்களை ஆரம்பித்தவர்கள் யார்? கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணுதல், கலவரத்திற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது போன்ற பல்வேறு காரணங்கள் குறித்து புலன் விசாரணை செய்ய இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்