திருப்பத்தூர்
சிறப்பு கல்விக்கடன் முகாம்
|திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய சிறப்பு கல்விக்கடன் முகாம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியுடன் 20 வங்கிகள் இணைந்து சிறப்பு கல்விக் கடன் வழங்கும் முகாம் நடத்துகிறது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். ரூ.4 லட்சம் வரை கல்விக் கடனாக பெறுவதற்கு எந்த விதமான உத்தரவாதமும் தேவையில்லை. ரூ.7½ லட்சம் வரையில் கல்விக் கடன் பெறுவதற்கு பிணை தேவையில்லை, அதற்கு மேலாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் பிணை வழங்க வேண்டும்.
மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு வித்யா லட்சுமி என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு, கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன், அனைத்து வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.