< Back
மாநில செய்திகள்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
5 Aug 2023 1:27 AM IST

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தா.பழூர்:

சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோடாலிகருப்பூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பல்வேறு வாசனாதி திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மாலையில் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் குத்துவிளக்கை அம்மனாக பாவித்து 1,008 போற்றி ஸ்தோத்திரங்களை கூறி, குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்தனர். பின்னர் அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடையார்பாளையம்

இதேபோல் உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை பெரிய குளம் கீழ் கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க, அம்மன் வீதி உலா நடந்தது.

மீன்சுருட்டி

மீன்சுருட்டியை அடுத்த செல்லியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், நாட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க வேண்டியும் பெண்கள் பூஜை செய்து, அம்மனை வழிபட்டனர்.

மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி சொக்கலிங்கேஸ்வரருக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கோவிலை நிர்மாணித்த மகாகுரு பஞ்சாட்சர சாமிகள் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஜீவசமாதி அடைந்தார். இதையொட்டி அவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் சிவவாத்தியம் முழங்க நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

அரியலூர் நகரில் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு கேரட், வாழைக்காய், புடலங்காய், சுண்டக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கைலாசநாதர் கோவில் எதிரில் உள்ள ராஜ மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்