திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமி தினங்களில் சிறப்பு தரிசன கட்டணங்கள் ரத்து - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|பொது தரிசனம் மூலம் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பவுர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு தரிசனக் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து, அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்திட இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியின் அருள் பெற்று செல்கின்றனர்.
மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்தது. இந்நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து, பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.