< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறை வழக்கில் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்: செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை வழக்கில் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்: செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
29 Aug 2023 2:15 AM IST

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதன்பின்பு அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

செந்தில் பாலாஜி கைது

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரணை முடிவில், 120 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

ஆஜர்

இதைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில்பாலாஜியை 28-ந் தேதி (நேற்று) கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி நேற்று அந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மதியம் 1.55 மணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் செந்தில்பாலாஜியை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

குற்றப்பத்திரிகை

மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது செந்தில்பாலாஜியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் 120 பக்க குற்றப்பத்திரிகை நகல் மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட வழக்கு ஆவணங்கள் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டு 8 தொகுப்புகளாக வழங்கப்பட்டன.

அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டார்.

மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை

இதன்பின்பு அந்த ஆவணங்களை செந்தில் பாலாஜி தனது தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் பரணிகுமார் ஆகியோரிடம் கொடுத்தார்.

விசாரணையின் போது, 'செந்தில்பாலாஜி மீதான விசாரணை மட்டும் முடிவடைந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மீதான விசாரணை தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் தெரிவித்தார்.

பின்னர், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் செந்தில்பாலாஜியை சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தார்.

ஜாமீன் கோரி மனு

இந்தநிலையில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி மீது சிறப்பு சட்டமான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஜாமீன் மனுவை இந்த கோர்ட்டு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதன்பின்பு, ஜாமீன் மனுவை திரும்ப அனுப்பி (ரிட்டர்ன்) உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மதியம் 2.50 மணிக்கு போலீஸ் வாகனம் மூலம் புழல் சிறைக்கு செந்தில்பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.

அடுத்த விசாரணையின் போது செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், அதன்பின்பு சாட்சி விசாரணை தொடங்கும் என்றும் தெரிகிறது.

கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம்

செந்தில்பாலாஜி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த கோவையை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் கோர்ட்டு அறைக்கு அருகே காத்திருந்தனர். அவர்களை போலீசார் அங்கு நிற்க அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

செந்தில்பாலாஜி போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி கோர்ட்டுக்கு சென்றபோதும், கோர்ட்டில் இருந்து திரும்பி வந்த போதும் போலீசார் அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்து சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளால் செந்தில்பாலாஜியை நெருங்க முடியவில்லை.

இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்