< Back
மாநில செய்திகள்
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தினத்தந்தி
|
26 Sept 2024 4:43 PM IST

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க, காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, விடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின்போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதன்படி, "28-ந்தேதி முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

மேலும் செய்திகள்